மிழக அரசு நிர்வாகத்தில், பல்வேறு துறைகளில் பணி செய்து ஓய்வுபெற்ற சுமார் 7 லட்சம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் இந்த ஓய்வூதியத்தால் வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். ஓய்வூதியதாரர்கள் உயி ருடன் இருப்பதை ஆண்டுக்கு ஒரு முறை உறுதி செய்ய வேண்டியிருக்கும். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங் களில், அந்தந்த பகுதிகளில் உள்ள கிளைக்கருவூல மையங்களில் நேரிலோ அல்லது இ-சேவை மையங்கள் மூலமோ தங்களுடைய உயிர்வாழ் சான்றினை சமர்ப்பித்து வந்தனர். சமர்ப்பிக்க வேண்டும் என்பது அரசின் உத்தரவு. அதே வேளை, வயதானவர்களுக்கு வெயில் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கருவூலங்களுக்குச் சென்று, உயிர்வாழ் சான்றிதழை அளித்துவந்ததில் மாற்றம் செய்யப்பட்டது.

rr

கடந்த ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக, கருவூலங்களுக்கு சான்றுகளை சமர்ப்பிக்க வரும் ஓய்வூதியதாரர் களின் கூட்டத் தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், அரசின் நிர்வாக வசதிக்காகவும், ஓய்வூதியதாரர்கள் முதன்முதலில் எந்த மாதத்தில் ஓய்வூதியம் பெற்றார்களோ, அதே மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிளை கருவூலங்கள் அல்லது சேவை மையங்கள் மூலமாக உயிர்வாழ் சான்று சமர்ப்பித்தால் போதுமென்று அரசு உத்தரவிட்டது. ஆனால் இதில் ஏராளமான நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகக் கூறுகிறார் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரும், தமிழக ஓய்வுபெற்ற அலுவலகர் சங்க மாநிலச் செயலாளருமான திட்டக்குடி இராமசாமி. இது குறித்து நம்மிடம் கூறுகையில், "மீண்டும் பழைய முறைப்படி ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர் கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை கருவூலங் களிலோ அல்லது இ-சேவை மையங்களின் வழி யாகவோ சமர்ப்பிக்க வேண்டுமென அரசு உத்தர விட வேண்டும். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அரசின் புதிய உத்தரவினால் 60 வயதைக் கடந்த ஓய்வூதியதாரர்கள், அவர்கள் எந்த மாதத்தில் முதன்முதலில் ஓய்வூதியம் பெற்றார்கள் என்பதை வயது மூப்பின் காரணமாக ஞாபக மறதி ஏற்பட்டு மறந்து விடுகிறார்கள். இதன் காரணமாக ஒவ்வொரு கிளைக் கருவூலங்களிலும் சுமார் 100 - 200 ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான் றிதழை சமர்ப்பிக்க மறந்துவிடுவதால், அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? இல்லையா? என்பது தெரியாமல், கிளை கருவூலங்களிலுள்ள அலுவலர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு மீண்டும் மீண்டும் தெரிவித்து உயிர்வாழ் சான்றிதழ் பெறவேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்களுக்கு இது கூடுதல் பணிச்சுமையாக உள்ளது. அன்றாடப் பணிகளும் பாதிக்கப்படுகின்றன.

பழைய முறைப்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், கருவூலங்களிலோ, சேவை மையத்தின் மூலமாகவோ வாழ்நாள் சான்றை புதுப்பிக்க வேண்டும் என்ற உத்தரவினை மறக்க மாட்டார்கள். அந்த அடிப்படையில் பழைய உத்தரவினை நடைமுறைப்படுத்து வதன் மூலம் அலுவலகப் பணி பாதிக்காது. இதுதான் எளிய நடைமுறை. தொலைநோக்குப் பார்வையில் போடப்பட்ட புதிய உத்தரவு மாற்றப்பட வேண்டும்'' என்கிறார்.

Advertisment

இதுகுறித்து ஓய்வூதிய சங்க நிர்வாகிகள், "ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நினைவூட்டுவதற்கும் வசதியாக உள்ளது. எனவே மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்றவர்கள் அவரவர் ஓய்வூதியம் பெற்ற தேதியில் வந்து உயிர்வாழ் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நடைமுறையை கட்டாயம் மாற்றி, பழைய நடைமுறைப்படி ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டுமென்ற உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும்'' என்கிறார்கள். ஓய்வூதிய சங்கத்தைச் சேர்ந்த சிறுமுளை கலாமணி, ஆபட்டி பாலகிருஷ்ணன், மாங்குளம் பன்னீர்செல்வம், ராமநத்தம் பிச்சுமணி, மாங்குளம் பன்னீர்செல்வம் ஆகியோர், "ஓய்வூதியம் பெறுபவர்கள் வயது மூப்பு காரணமாக மறந்து விடுவார்கள். இதனால் அவர்கள் உயிர்வாழ் சான்று அளிப்பதில் பல நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகிறது மேலும், எங்களைப் போன்ற சங்கத்திலுள்ள நிர்வாகிகள், ஓய்வூதியதாரர்கள் எந்த தேதியில் ஓய்வூதிய பணப்பலன் பெற்றார்கள் என்பதை கண்டறிய முடியாது. எனவே தமிழக அரசு, ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் நலனைக் கருத்தில்கொண்டு பழைய முறைப்படி ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயம் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை அரசு கருணையோடு பரிசீலனை செய்ய வேண்டும்'' என்கிறார்கள்.

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுகிறவர்கள் மீது தமிழக அரசுக்கு மிகுந்த அக்கறை உள்ளது. எனவே நடைமுறை சிக்கல்கள் நிறைந்த புதிய முறையை மாற்றி பழைய முறைப்படி செயல்படுத்த வேண்டும் என்பதே பெரும்பாலான ஓய்வூதியதாரர்களின் கருத்தாக உள்ளது.

-எஸ்.பி.எஸ்.